ஓட்டைப்பிரித்து வீட்டினுள் இறங்கி
புத்தம்புதிய சைக்கிள் திருட்டு!
-பாடசாலை செல்ல மாணவி சிரமம்-
பூட்டியிருந்த வீட்டின் ஒட்டினைப் பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள் புதிய துவிச்சக்கரவண்டியைத் திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த 16 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளது. பொன்னாலை மேற்கில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றது.
கணவனால் கைவிடப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றில் இருந்து க.பொ.த உயர்தரம் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட துவிச்சக்கரவண்டியே திருடப்பட்டுள்ளது.
காலையடி – பண்டத்தரிப்பை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தமது மணிவிழாவை முன்னிட்டு கடந்த 2021 நவம்பர் மாதம் ஐந்து மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை வழங்கியிருந்தார். அதில் மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்ட துவிச்சக்கரவண்டியே திருடப்பட்டுள்ளது.
குறித்த மாணவியும் தாயாரும் தம்பியும் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள தமது பேர்த்தியாரின் வீட்டில் நடைபெற்ற துரய நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோதே இரவு நேரம் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் கற்கும் மேற்படி மாணவி துவிச்சக்கரவண்டி இன்மையால் பாடசாலைக்கும் தனியார் கல்வி நிலையத்திற்கும் செல்வதற்கு பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.