நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நிலைமை காரணமாக சிறுவர்கள் கூலித்தொழிலாளர்களாக பயன்படுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், பாடசாலைக்கு தொடர்ச்சியாக அனுப்பாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாக அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் தற்போதைய சட்டத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஆபத்தில்லாத பணிகளில் மட்டுமே அமர்த்த முடியும்.
இது அவர்களின் வாழ்க்கை, சுகாதாரம், கல்வி அல்லது தார்மீக வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும்.
மேலும் அந்த சிறுவர்களை பாதுகாப்பற்ற வேலைகளில் அமர்த்துவதும், இரவு நேரங்களில் பணிக்கு அமர்த்துவதும் சட்டவிரோதமானதாகும்.
எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த மீறப்பட்டு அதிகளவான சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படும் அபாயம் இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.