பொருளாதார யுத்தத்தை வெற்றிக்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியம் – ரோஹித அபேகுணவர்தன

0
175

பொருளாதார யுத்தத்தை வெற்றிக்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எமது நாடு, உலக நாடுகள் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கும் தருணத்திலேயே அரசாங்கம் என்ற முறையில் நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

வழமையாக அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை சமர்பிக்கும் போது அந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக தமக்குக் கிடைக்கும் நிவாரணங்கள் என்ற சலுகைககள் என்ன என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமா? போன்ற விடயங்கள் மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படும்.

எனினும் இந்த வரவு- செலவுத் திட்டத்தில் அவ்வாறான ஒரு நிலைமை இல்லை.

உண்மையை நாம் கூறியாக வேண்டும்.

நாடு என்று வரும்போது அதில் வருமானம் செலவீனம் இரண்டுமே காணப்படும்.

தற்போதைய நிலையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் வருமானத்தைவிட செலவீனமே அதிகமாகக் காணப்படுகின்றது.

செலவு செய்வதற்கு வருமானம் என்பது இருக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறான நிலைமையில் மிகவும் நெருக்கடிக்கு மத்தியிலேயே இந்த வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாம் தற்போதைய நிலையில் கட்சி, நிறம் என்று பிரிந்து நின்று செயற்படாது பழைய அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்காது பொருளாதார யுத்தத்தை வெற்றிக்கொள்வதற்கு புதிய அரசியலை பாணியை கையாள வேண்டியது அவசியாகும்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதானாலேயே 30 வருட யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடிந்தது.

எனவே அதைப்போன்று தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டியது அவசியமாகும்.

தேசிய ரீதியில் நாம் மேழுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியமாகும்.