பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் சுமார் 7,600 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ஈட்டியுள்ளது.
இதன்படி, இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 7,604.12 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இது கடந்த வருடம் இதே காலப்பகுதியில் ஈட்டிய ஏற்றுமதி வருமானமான 6,803 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 11.8 வீத அதிகரிப்பு என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கை இந்த வருமானத்தை ஈட்டியுள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மாத்திரம், சரக்கு ஏற்றுமதி வருமானம் 1,128.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இது ஜூலை 2021 இல் ஈட்டிய 1,103.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 2.25 சதவீதம் வளர்ச்சியாகும்.
எவ்வாறாயினும், இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கை ஆடைகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதி மூலம் அதிகூடிய வருமானத்தை எட்டியுள்ளது.
இது 3,517.44 மில்லியன் அமெரிக்க டொலர்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 20.01 சதவீத வளர்ச்சியாகும். தேயிலை ஏற்றுமதி மூலம் 694.90 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது.
மேலும், இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இறப்பர் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் கிடைத்த வருமானம் 501.047 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி-ஜூலை மாதம் வரை சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 1,146 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது 2021 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலகட்டத்தை விட 5.39 சதவீதம் அதிகரித்துள்ளது.