கோட்டாபய அரசாங்கத்தில் எடுக்கப்பட்ட நிறைய தீர்மானங்களில் மகிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனவே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மகிந்த பொறுப்புக்கூறத் தேவையில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். காலிமுகத்திடல் போராட்டத்தால் மகிந்த ராஜபக்ஷவின் பெயருக்கு ஏற்பட்ட சேதம்தான் எங்களுக்குக் கவலை. அவருக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது. கோட்டாபய அரசாங்கத்தில் நிறைய தீர்மானங்களில் மகிந்த சம்பந்தப்பட்டிருக்கவில்லை.
பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளுக்கெல்லாம் அவர் பொறுப்புக்கூறத் தேவையில்லை. அதுதான் அரசியல். நல்ல விமர்சனங்களை மட்டும் எதிர்பார்க்கக் கூடாது. அப்படியானவர்களால் அரசியல் செய்ய முடியாது. எமது அரசியல் வரலாற்றில் இவ்வாறான பல நிகழ்வுகளை நாம் கடந்து வந்துள்ளோம். இவ்வாறான எல்லா சவால்களையும் எதிர்கொள்ள நான் தயார். நல்லாட்சியிலும் நான் பல சவால்களை எதிர்கொண்டேன். என்னை மூன்று தடவைகள் சிறையில் போட்டார்கள்.
எம்மை அடித்து – கொலை செய்து- வீடுகளுக்கு தீ வைத்து – அச்சமூட்டி எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது. அரசியல் அதிகாரம் இருப்பது மக்களின் கைகளில். நாங்கள் அரசியலில் இருக்க வேண்டுமா, இல்லையா என்று அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். காடைத்தனம் ஊடாக எம் அரசியல் பயணத்தைக் தடுக்க முடியாது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றியடைந்தே தீரும் என தெரிவித்துள்ளார்.