கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும், பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்புடன், அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் வலியுறுத்தியுள்ளார்.
இன்று, மனித உரிமை பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர், ஜெனிவா நகரில் ஆரம்பமான வேளை, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போது, இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில், பொறுப்புக்கூறல் அவசியம்.
ஆழமான அரசியல் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களைக் கோரி போராட்டம் இடம்பெற்று ஒரு வருடத்திற்குப் பிறகும், நீண்ட கால சவால்களை எதிர்கொள்ள எதிர்பார்த்த மாற்றம், இன்னும் நிறைவேறவில்லை.
உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் பங்கேற்பதற்கான மக்களின் உரிமையையும் வாக்காளர்களின் சுதந்திரமான கருத்துக்களையும் மட்டுப்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியானது, இலங்கையில் பெரும்பான்மையினரின் உரிமைகளில் கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அது ஏழைகளையே அதிகம் பாதித்துள்ளது.
நாட்டின் வறுமை விகிதம், 2021 இல் 13 வீதத்தில் இருந்து 2022 இல் 25 வீதம் என இரு மடங்காக உயர்ந்துள்ளதால், மேலும் 2.5 மில்லியன் மக்கள், வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் மற்றும் 37 வீதமான குடும்பங்கள், கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றன.
அரசாங்கம், பொருளாதார மீட்சிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால், அது, மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாப்பதற்காக, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் கீழ், அதன் கடமைகளால் வழிநடத்தப்பட வேண்டும்.
சர்வதேச நிதி நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகம், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உதவி தொடர்பான கடப்பாடுகளுக்கு இணங்க, இலங்கையின் மீட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடி, சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில், இராணுவ மயமாக்கல் நடவடிக்கை, வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் நடைபெறும் விடயங்கள் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக்கு உரியவர்களை நினைவுகூருவதற்கான முயற்சிகளும் தடுக்கப்பட்டுள்ளன.
எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமையை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கைகள், நாட்டில் மேலும் பதற்றத்தையே உருவாக்கும்.
கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் சூழலை அரசாங்கம் உறுதி செய்வது இன்றியமையாததாகும்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், ஊடக ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்தும், கவலைகள் எழுந்துள்ளன.
யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும், பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பங்களும், உண்மை, நீதியை பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
இருப்பினும், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை உட்பட, நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆரம்பித்துள்ள முயற்சிகளை வரவேற்கின்றோம்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குகளை, சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு இணங்க, அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்.
சர்வதேச உதவியுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழு பங்கேற்புடன், சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை அவசியம்.
கடந்த கால மீறல்களை அங்கிகரிப்பதும், நம்பகமான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை மேற்கொள்வதும், இலங்கை அதிகாரிகளின் கடப்பாடாக இருக்கும் அதேவேளை, பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதில், இந்த சபையும் உறுப்பு நாடுகளும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டும்.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முழுமையாக கையாளும் நடவடிக்கைகளுக்கு என, இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவளிக்க, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாராக உள்ளது.
என குறிப்பிட்டுள்ளார்.