நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் தலைமையகம் இன்று (18) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக நான்கு மதுபான சுற்றிவளைப்புகளில் மட்டும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 88 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 120 லீற்றர் கோடா, 5 பீப்பாயகள் இரண்டு குழாய்கள் என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவித்திகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெல, நிவித்திகல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23, 34, 36, 37 மற்றும் 43 வயதுகளையுடைய ஐவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சுரங்கம் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்கிரியாகம பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பும்போக பிரதேசத்தை சேர்ந்த 37 மற்றும் 42 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் கெபத்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
போகஹவௌ, அளுத்கொலனிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 20, 39 மற்றும் 55 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.