போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது

0
11

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்டவர் கனடா நாட்டைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை  கனடாவிலிருந்து இருந்து கத்தாரின் தோஹா நகரத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து இன்றைய தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தின்  ( Green Channel) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை கொண்டு வந்த பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த  12 கிலோ 196 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும் 05 கிலோ 298 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.