நெடுங்கேணி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளான வாகனத்தில் மது போதையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றகல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில், உயர்தரப் பரீட்சையில் வடமாகாண மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருக்கின்றது. மன்னார் நகர் பகுதியிலுள்ள சென். சேவியர் ஆண்கள் பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை இந்த இடத்தில் மீண்டும் அவருக்கு நினைவுபடுத்துகின்றேன்.
இதேவேளை, வவுனியா நெடுங்கேணி பகுதியில் வீடொன்றுக்குள் பொலிஸ் வாகனம் உட்புகுந்துள்ளது. 6 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அந்த வாகனத்தில் இருந்துள்ளதுடன் அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். வீதியை விட்டு விலகி அந்த வாகனம் குறித்த வீட்டுக்குள் புகுந்துள்ளது. அந்த நேரத்தில் குறித்த வீட்டில் 42 மாணவர்கள் கல்விகற்றுகொண்டு இருந்துள்ளனர். ஆசிரியர் ஒருவரின் வீடு என்பதனால் அந்த மாணவர்கள் இருந்தனர். ஆனால் மயிரிழையில் மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த 6 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் பணி இடைநிறுத்தம் செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன். பொலிஸ் அந்த வாகனத்தை செலுத்தியவர் புளியங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாகும். இவ்வாறான பொலிஸாரை வைத்துக்கொண்டு எப்படி நாட்டின் சட்டம் ஒழுங்கை காக்க முடியும் என்று கேட்கின்றேன்.
தேவையற்ற வகையில் பொய் வழக்குகளை போட்ட பொலிஸ் அதிகாரிகள் மதுபோதையில் இவ்வாறு நடந்துகொண்டுள்ளனர். வாகனம் வீட்டுக்குள் சென்றுள்ள நிலையில் வீதியில் விபத்து நடந்ததை போன்று போக்குவரத்து பொலிஸார் எழுதுகின்றனர்.இவ்வாறான கீழ்த்தரமான அதிகாரிகளை வைத்துக்கொண்டு எப்படி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும். இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகின்றேன்.