போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க சட்டத்தின் மூலம் உரிய நடவடிக்கைகளை உருவாக்கியுள்ளதாகவும் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நிலையான திட்டங்களை செயல்படுத்துவேன் எனவும் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பொது விவாதத்தில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் பங்கேற்ற அவரிடம் ’30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் என்ன?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். காணாமல் போனோர் பணிமனையை அமைத்தோம். காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை வெகுவிரைவில் நிறைவு செய்ய சட்டத்தால் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
வடக்கு – கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளேன். நிலையான தீர்வுக்கு உரிய நடவடிக்கைகளை செயல்படுத்துவேன்.
அத்துடன், தான் ஆட்சிக்கு வந்தால், கல்வி முறைமை, பொதுப் போக்குவரத்து முறைமை என்பவற்றை முழுமையாக மாற்றி அமைப்பேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதார காப்புறுதி திட்டங்களை வழங்குவேன் என விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.