உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் போர் முடிவுக்கு வருவதற்கான நல் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ரஷ்யா, உக்ரைனில் தனித்தனியாக அரசு முறை பயணம் மேற்கொண்ட அவர், இரு நாடுகளின் அதிபர்களிடமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த தீவிரம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கடந்த 11-ம் தேதி அமெரிக்கா, உக்ரைன் அதிகாரிகள் ரியாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 30 நாட்கள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். இதுதொடர்பாக அவர் நேற்று முன்தினம் கூறியதாவது: அமெரிக்காவின் 30 நாட்கள் போர் நிறுத்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அமைதி முயற்சிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளிக்காது. அந்த நாட்டு அதிபர் புதின் காலதாமதம் செய்வார். 30 நாட்கள் போர் நிறுத்த திட்டத்தை அவர் நிராகரிப்பார். போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி முழு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மாஸ்கோவில் நேற்று முன்தினம் கூறியதாவது: 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் போர் நிறுத்தத்தை அமல் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதுதொடர்பாக அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள சுட்ஜா நகரை கைப்பற்றும் நிலையில் இருக்கிறோம். குர்க் பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான உக்ரைன் ராணுவ வீரர்கள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் எங்கும் தப்பிச் செல்ல முடியாது. 30 நாட்கள் போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டால் உக்ரைன் வீரர்கள் தப்பிச் சென்றுவிடுவார்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ரஷ்ய ராணுவத்திடம் சரண் அடைய வேண்டும்.
போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தீவிர முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி முயற்சியை ஆதரிக்கும் சீனா, சவுதி அரேபியா, பிரேசில், தௌன்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன். இவ்வாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
சிறப்பு தூதர் பேச்சுவார்த்தை: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விக்கோப், மாஸ்கோவில் நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் புதினை ரகசியமாக சந்தித்துப் பேசினார். அப்போது 30 நாட்கள் போர் நிறுத்தம் தொடர்பாக இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, சிறப்பு தூதர் ஸ்டீவ் விக்கோப் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்தார். ரஷ்யா, உக்ரைன் அதிபர்களின் கருத்துகளை கேட்டறிந்த ஸ்டீவ் விக்கோப் வாஷிங்டன் திரும்பி உள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், சிறப்பு தூதர் ஸ்டீவ் போர் கள நிலவரத்தை விவரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.