நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை நேற்று சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
இதன்போது மகாநாயக்கர்களின் ஆசியுடன், இந்து மற்றும் பௌத்த மத நல்லிணக்கத்திற்கான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
மறைந்த பெருந் தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரின் காலந்தொட்டு, கண்டி அஸ்கிரிய பீடத்துடன் நல்லதொரு தொடர்பை பேணி வருவதையும் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்ட நிதி உதவியை கொண்டு கோவில்கள் மற்றும் பௌத்த விகாரைகளை மேம்படுத்தும் பணிகளை புரிந்துணர்வுடன் முன்னெடுப்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.
அதனையடுத்து நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் அவசியமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்திய மகாநாயக்க தேரர், அமரர் ஆறுமுகம்; தொண்டமான் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் மூலம் அஸ்கிரிய பீடத்திற்கு கிடைத்த உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
இளம் அரசியல் தலைவர் என்ற வகையில் துடிப்புடன் செயற்படும் அதேநேரம், நாட்டின் அபிவிருத்தி மற்றும் இன நல்லிணக்கத்திற்கான பணிகளை முன்னெடுப்பதோடு அனைவரினதும் ஒற்றுமையை பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, அமைச்சருடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி உட்பட முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துக் கொண்டனர்.