வெஸ்ட்மின்ஸ்டரில் வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அவரது இறுதி சடங்கு வரும் 19ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.
இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். இதனிடையே ஸ்காட்லாந்து தலைநகர் எடின்போராவில் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலுக்கு முதலில் அரச குடும்பத்தினரும், பின்னர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணியின் உடலை மன்னர் 3-ம் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து ராணியின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் திறக்கப்பட்டது.
மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் லண்டனில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Home முக்கிய செய்திகள் மகாராணியின் பூதவுடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி – இறுதி சடங்கு 19ஆம் திகதி