மக்களின் வெளியேற்றம்

0
108

ஒருபுறம் அரசியல் தீர்வு பற்றிய கற்பனைகள்.
மறுபுறமோ நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது – அதற்கு எதிராகப் போராட வேண்டுமென்னும் குரல்கள்.
அரசியல்வாதிகள் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது மறுபுறம் வாய்ப்புள்ள மக்களோ – எவ்வாறு நாட்டைவிட்டு வெளியேறலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
கனடிய அரசாங்கம் தற்போது குடியேற்ற நடைமுறையில் சில தளர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனை ஓர் அரிய வாய்ப்பாகக் கருதும் தமிழ் மத்தியதர வர்க்கமோ குடும்பமாக வெளியேறுவதில் தீவிரம் காட்டிவருகின்றது.
ஏற்கனவே, பெருமளவானவர்கள் வெளியேறிவிட்டனர்.
கனடிய அரசாங்கத்தின் குடிவரவு கொள்கை ஆசியாவை அடிப்படையாகக்கொண்டது.
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாய்ப்பை – அதிகம் ஈழத் தமிழர்களே பயன்படுத்தி வருகின்றனர்.
காரணம், ஏற்கனவே கனடாவில் உறவினர்களை கொண்டிருப்பவர்கள் மிகவும் இலகுவாக செல்வதற்கான வாய்ப்பை கனடா வழங்கியிருக்கின்றது.
இன்னொரு புறமோ, இதனை ஒரு தொழிலாக முன்னெடுக்கும் போக்கும் அதிகரித்திருக்கின்றது.
அதாவது, கனடாவில் உள்ளவர்களின் ஆதரவுடன் அவர்களிடமிருந்து கடிதமொன்றை பெறும் முகவர்கள் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு கனடாவுக்கு அனுப்பும் தொழிலை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விடயத்தை கனடிய தூதரகம் அறியாமலும் இருக்கலாம்.
உதாரணமாக கனடாவில் ஒரு வியாபார நிலையத்தை நடத்தி வருபவர் தனக்கான வேலையாட்களாக சிலரை அழைக்க முடியும்.
இதனைப் பயன்படுத்தும் முகவர்கள் – குறித்த கனடிய நபருக்கு குறிப்பிட்டளவான பணத்தை வழங்குவதற்கு இணங்குவதன் மூலம் கனடாவின் குடியவரவு கொள்கையின் நெகிழ்ச்சியை நல்லதொரு வியாபாரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரே தடவையிலேயே கனடிய தூதரகம் கடவுச்சீட்டை வழங்குகின்றது.
இது குடும்பமாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.
வடக்கு – கிழக்கிலிருந்து ஏராளமான குடும்பங்களும் தனிநபர்களும் கனடாவுக்குள் நுழைந்திருக்கின்றனர்.
பெரும்பாலானவர்கள் உல்லாசப் பயணர்களுக்கான கடவுச்சீட்டிலேயே செல்கின்றனர்.
ஆனால், அவ்வாறானர்கள் திரும்பி வரப்போவதில்லை.
இதனை கண்காணிப்பதற்கான பொறிமுறையையும் கனடிய அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.
கனடா இந்த விடயத்தில் நெகிழ்வான கொள்கை நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது.
அடுத்த ஆண்டும் 5 ஆயிரம் ஆசியர்களை அனுமதிக்கவுள்ளது.
இதனையும் வடக்கு – கிழக்கு தமிழர்களே அதிகம் பயன்படுத்தப் போகின்றனர்.
ஏற்கனவே, 12 இலட்சத்துக்கு மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.
அவர்களே தற்போது, கனடாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்கின்றனர்.
அவர்களின் உதவியுடன்தான் ஏனையவர்களும் தற்போது வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் மூலம், தாங்கள் வெளியேறியமை போன்று தங்களுடைய உறவினர்களையும் வெளியேற்றும் மகத்தான தேசிய பணியை புலம்பெயர் சமூகம் ஆற்றிவருகின்றது.
உண்மையில் ஒரு காலத்தில் புலம்பெயர்வு தமிழ் தேசியத்துக்கான பலமாக நோகப்பட்டது.
ஆனால், தற்போது புலப்பெயர்வு தமிழ் மக்களின் இருப்பை சிதைக்கும் பணியையே திறம்பட செய்துவருகின்றது.
வசதியுள்ள இடங்களைத் தேடி மக்கள் செல்வது இயல்பானது.
ஆனால், அது தமிழ் சூழலை பொறுத்தவரையில் ஒரு பேராசையாக மாறிவிட்டது.
வசிதியுள்ளவர்கள் – சிறந்த தொழில்களில் இருப்பவர்களும்கூட தற்போதைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வெளியேறுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.
இதற்கு பக்கபலமாக செயல்படும் வகையிலேயே சிலரின் அரசியல் செயல்பாடுகளும் அமைகின்றன.
வடக்கு – கிழக்கில் எப்போதும் ஏதாவதொரு பிரச்னை இருப்பதான தோற்றத்தைக் காண்பிக்கும் அரசியல் செயல்பாடுகளும் இவ்வாறான மக்கள் வெளியேற்றத்தை ஊக்குவிக்கின்றது.
அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்றவாறான அரசியல் சுலோகங்களும இறுதியில் மக்களை வெளியேற்றுவதற்கே பயன்படுகின்றது.
இது நீண்டகாலத்தில் தமிழ் மக்களுக்கான நிலம் என்று ஒன்றை அடையாளப்படுத்த முடியாத நிலைமையை ஏற்படுத்தும்.
இறுதியில், வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களே எஞ்சுவர்.
இதனை விளங்கிக் கொள்ள முடியாதவர்களாகவா தமிழ் தேசியர்கள் இருக்கின்றனர் அல்லது விளங்கிக் கொண்டே சிதைக்கும் பணியை செய்கின்றனரா?