ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் காற்சட்டையை இரண்டு பக்கங்களில் தூக்கிப் பிடித்துக்கொண்டு, தன்னை ஹிட்லர் எனக்கூறும்போது சிரிப்பு வருவதாகவும், ஹிட்லர் தனக்கு தானே சுட்டுக்கொண்டு இறந்து போனதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹியங்கனையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இராணுவத்தில் சீருடைகளை அணிந்துக்கொண்டிருப்பது நாட்டின் கிராமங்களில் உள்ள கஷ்டப்படும் குடும்பங்களின் பிள்ளைகளே அன்றி ரணில் விக்கிரமசிங்கவின் பிள்ளைகள் அல்லர் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் ஹிட்லரை போன்றவர் எனக் கூறுகிறார். அவர் பாராளுமன்றத்தில் எழுந்து காற்சட்டையை இரண்டு முறை தூக்கிக்கொண்டு நான் ஹிட்லர் போன்றவன் எனக்கூறும்போது சிரிப்பு வந்தது. உண்மையில் ஹிட்லர் இறுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார். ஹிட்லர் உயிருடன் இருந்தால், மீண்டும் ஒரு முறை தன்னை தானே சுட்டு இறந்திருப்பார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்ன கூற வருகிறார். மக்கள் எழுச்சி பெறக்கூடாது. அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன். மக்கள் எழுச்சி பெற்றால் இராணுவத்தை அழைப்பேன் எனக் கூறுகிறார். இராணுவத்தில் இருக்கும் 90 வீதமானவர்கள் எமது தாய், தந்தைகளின் பிள்ளைகள். பொலிஸாரும் அப்படியே. மஹியங்கனையை சேர்ந்த எத்தனை தாய், தந்தைமாரின் பிள்ளைகள் இராணுவத்தில் இருக்கின்றனர்? தமக்கு ஏற்பட்டுள்ள தலைவிதியை அந்த பிள்ளைகள் அறிவார்கள். தமது தாய்,தந்தையின் வயல்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை அவர்கள் அறிவார்கள். அனைத்தையும் அறிந்தும் சீருடையை அணிந்து இருக்கின்றனர். அவர்கள் எமது பிள்ளைகள். எப்படி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உரியவர்கள் ஆவார்கள் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.