அரச தரப்பால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் 4ஆவது விஷேட கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாகும். அரச தரப்பால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் மக்கள் ஒத்துழைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை மட்டக்களப்பில் கட்டுப்படுத்த முடியாது.
எனவே பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 14 நாள்கள் தனிமையிலிருந்து கொள்ள வேண்டும்.
மேலும் மாவட்டத்திலுள்ள 345 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அமைக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட கண்காணிப்புக் குழுக்களுக்கான விழிப்பூட்டல் பயிற்சிகள் ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட்டு அக்குழு மூலமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்டத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டு உள்வரும் வாகனங்கள் மற்றும் நபர்களின் விவரங்களைச் சேகரிக்கும் சோதனைச் சாவடிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக சுகாதாரப் பிரிவிலிருந்து ஒருவரும் மாவட்ட நிர்வாகத்துறை சார்பாக ஒருவரும் இணைக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கும் நடவடிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர தேசியளவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், இம்மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று தெற்கு ஆகிய 4 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 25 ஆயிரத்து 296 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.