மக்கள் மடையர்களா?

0
219

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா. சம்பந்தன் அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அவசியமென்று வலியுறுத்தியிருக்கின்றார். (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறியிருக்கும் நிலையில் சம்பந்தனை கூட்டமைப்பின் தலைவராக அழைப்பதிலுள்ள தொழில்நுட்ப சிக்கல்களை கருத்தில் கொண்டே அவரை முன்னாள் தலைவரென்று அழைக்க வேண்டியிருக்கின்றது)
ரணில் – மைத்திரி காலத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கத்தை வலியுறுத்துமாறு பலரும் கோரிய போது, சம்பந்தன் அதனை நிராகரிப்பதில் ஒற்றைக் காலில் நடனமாடினார்.
’13ஆவது திருத்தச் சட்டத்தைத் தாண்டி நாங்கள் அதிக தூரம் சென்றுவிட்டோம்’, என்றார்.
‘அதுபற்றி எவரும் பேசவேண்டியதில்லை’, என்றார்.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதனை வலியுறுத்தியபோது அவர்களை அமைதிப்படுத்தினார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் இந்தியாவின் தலையீட்டைக் கோரும் முடிவை பங்காளிக் கட்சிகள் முன்னெடுத்த போது – அதில் சம்பந்தன் குழப்பங்களை ஏற்படுத்தினார்.
தான் கையெழுத்திட வேண்டுமென்றால், தான் கூறும் விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றார்.
மகிந்த ராஜபக்ஷவே 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வது பற்றி கூறுகின்றார் (கூறுகின்றான் என்றே சுமந்திரன் அப்போது குறிப்பிட்டிருந்தார்) இந்த
நிலையில் எதற்காக நாங்கள் ’13’ பற்றிப் பேச வேண்டுமென்று சுமந்திரன் ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.
ஆனால், இப்போது 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தம் வேண்டுமென்று சம்பந்தன் கூறுகின்றார்.
அவ்வாறாயின் இதுவரையில் கூறிவந்தது என்ன? அப்போது ஏன் நிராகரிக்கப்பட்டது? இப்போது ஏன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது? சம்பந்தன் நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவரால் சமஷ்டியை அடைய முடியாது – எனவே, 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டுமென்று எண்ணுகின்றாரா?
13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பயணிக்கும் முடிவை ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் சம்பந்தன் மேற்கொண்டிருந்தால் நிலைமைகளில் முன்னேற்றத்தைக் கண்டிருக்கலாம் – காலமும் விரயமாகியிருக்காது.
புதிய அரசியல் யாப்பு விடயத்துக்காக செலவிட்ட காலத்தை இருப்பதை பலப்படுத்துவதில் செலவிட்டிருந்தால் சில விடயங்களையாவது அடைந்திருக்கலாம்.
அனைத்தையும் அடைய முடியாது.
74 வருடங்களாக பேசப்படும் சமஷ்டியை அடைய முடிந்ததா? சமஷ்டி பற்றிப் பேசிய தமிழரசு கட்சி தலைவர்கள் என்போர் பலரின் பேரப்பிள்ளைகள்கூட நாட்டில் இல்லை.
இத்தனை வருடங்கள் அடைய முடியாததை இனி அடைவோமென்று மக்களிடம் கூறுவதும் மக்களை நம்பவைப்பதற்காக போலியான கதைகளை புனைவதும்தான் கடந்த 13 வருடங்களாக நடந்திருக்கின்றன.
ஆனால், முன்னுக்குப் பின் முரணாகக் கதைப்பது பற்றி எந்தவொரு குற்றவுணர்வும் எவருக்குமில்லை.
அன்று 13ஆவது திருத்தத்தைத் தாண்டி அதிக தூரம் சென்றுவிட்டதாகக் கூறிய சம்பந்தன், இன்று எந்வொரு குற்றவுணர்வுமில்லாமல், அதனை அமுல்படுத்துவதற்கு
சர்வதேச சமூகம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென்று கூறுகின்றார் என்றால் – அவர் மக்களைப் பற்றி என்ன நினைக்கின்றார் – மடையர்களென்றா? மற்றவர்களிடமிருந்து பொறுப்புக் கூறலை எதிர்பார்க்கும் நமது அரசியல்வாதிகள் ஆகக் குறைந்தளவாவது சொந்த மக்களுக்கு பொறுப்புள்ளவர்களாக
இருக்கவேண்டும்.