மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் புலனாய்வு குழுவினர் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது சட்டவிரோதமான முறையில் அதிக விலையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 4 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்கள் சட்ட நடவடிக்கைக்காக மாவட்ட மதுவரி திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்படவுள்ளதாக குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க முன்னெடுத்துள்ள நடவடிக்கையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.