மட்டக்களப்பில் சேதன உர உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை

0
255

அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரசாயன உரங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் உயரிய சிந்தனைக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் சேதன உர உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதற்கமைவாக மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் சேதனப்பசளைகளை உற்பத்தி செய்யும் நடவடிகடகையில் ஈடுபடும் நிறுவனத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அங்குள்ள குறைபாடுகள் பற்றி கேட்டறிந்தார்.

அதனை மேம்படுத்த தேவையான உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அவ்விடத்திலிருந்து உரிய அதிகாரிகளுக்கு தொலைபேசியின் ஊடாக அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவிக்கையில் தற்பொழுது தான் 2000 ஏக்கர் நிலப்பரப்புக்கு தேவையான சேதனப்பசளைகளை உற்பத்தி செய்வதாகவும் இதன் மூலம் 50 பேருக்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் தனது தொழில் முயற்சியை மேம்படுத்த 5 ஏக்கர் காணிகள் தனக்கு தேவைப்படுவதாகவும் இதன் மூலம் 5000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு தேவையான சேதனப் பசளைகளை தடையின்றி விநியோகிக்க முடியும் எனவும் இதன் மூலம் 100 பேருக்கு அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இவ்விடயங்களை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் இது போன்ற அரசாங்கத்தின் மக்கள் நல வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொண்டு செல்வதற்கு உறுதுணையாக அமைகின்ற தொழில் முயற்சியாளார்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள அரசாங்கமும் தாமும் பின்நிற்க போவதில்லை என்று கூறினார்.