மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன அலுவலகத்தில் விவசாய துறைக்கான தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் வர்த்தக, வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்துஆராயப்பட்டது.குறிப்பாக எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையினை முன்னெடுப்பதற்கு தேவையான உள்ளீடுகள் கிடைக்கப்பெறும் வரையில் நெற்செய்கையில் ஈடுபடப்போவதில்லையென விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் சிறுபோக அறுவடையின்போது பெறப்பட்ட நெல்லுக்கு இதுவரையில் சிறந்த விலை கிடைக்காமை, நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்கு இதுவரை பணம் வழங்காமை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடும் வகையில் அவர்களுக்கான பசளை உட்பட உள்ளீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த வர்த்தக,வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.