மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேருக்கான, புதிய வடம் கன்னன்குடா மக்களால் வடிவமைக்கப்பட்டு, இன்றைய தினம், சம்பிரதாய ரீதியாகக் கையளிக்கப்பட்டது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய சித்திரத் தேருக்கான வடம், நீண்ட காலமாக கன்னன்குடா மக்களால், வடிவமைக்கப்பட்டு, வழங்கப்படுவது பாரம்பரியமாகக் காணப்படும் நிலையில், இறுதியாக 10 வருடங்களுக்கு முன்னர் வடமொன்று,அவர்களால் கையளிக்கப்பட்டது.
இவ்வருட தேர்த் திருவிழாவிற்காக, புதிதாக வடம் உருவாக்கப்பட்ட நிலையில், வடத்தினைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கொக்கட்டிச்சோலையில் இருந்து 16 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கன்னன்குடாவில் இருந்து எடுத்துவரப்பட்ட மூன்று வடங்களும், சமய சம்பிரதாயங்களுக்கு அமைய, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரிடம் இன்று கையளிக்கப்பட்டது. மரபு ரீதியாக சித்திரத் தேருக்கான அச்சு, தேர்ச் சில்லு மற்றும் ஆலய கொடிமரம் சீவுதல் போன்ற பணிகளை கன்னன்குடா கிராம மக்களே மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.