பாசிக்குடா கடற்கரையை “புளு பிளேக் பீச் ஆக தரமுயர்த்துவது தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை முகாமைத்துவக் குழுவின் மூன்றாவது கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன்
தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், திட்டத்தின் தேசிய இணைப்பாளர் சந்துன் விக்ரமசிங்க வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார்.
சுற்றுலாத்துறை அமைச்சின் அனுசரணையில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த திட்டத்திற்காக அருகம்பே மற்றும் பாசிக்குடா ஆகிய இரு கடற்கரைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. “புளு பிளேக் பீச்” தரச் சான்றிதழ் டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள சுற்றாடல் கல்விக்கான மன்றம் எனும் சர்வதேச நிறுவனத்தினால் சுற்றாடல் கல்வி மற்றும் தகவல், தரமான நீர், சுற்றாடல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் சேவை ஆகிய பிரதான நான்கு காரணிகளுடன் காணப்படும் கடற்கரைகளுக்கு வழங்கப்படுகின்றது.
இதற்கான திட்டங்களை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, கல்குடா பிரதேச சபை ஆகியவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ஆர்.ஜதிஸ்குமார், ரி.நிர்மலன், சுற்றுலாத்துறை அமைச்சின் மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகாநந்தராஜ், வட-கிழக்கு மாகாணங்களுக்கான உதவி முகாமையாளர் சிவகுமார், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அதிகாரி ஆசிபா , இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.