மட்டக்களப்பு பூநொச்சிமுனை பச்சை வீட்டு திட்டப்பகுதியை, இன்று அதிகாலை சுற்றிவளைத்த, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். கடந்த வாரம் வீடு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம், சில தினங்களுக்கு முன்னர் இப் பகுதியில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவங்களையடுத்தே இச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
சோதனை நடவடிக்கையில் காத்தான்குடி பொலீசார் , இராணுவத்தினர் மற்றும் விஷேட அதிகரிப்படையினர் கூட்டாக இணைந்து ஈடுபட்டனர். பொலீஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. பச்சை வீட்டுத் திட்டம் பகுதியில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் விபரங்களும் பொலீசாரினால் திரட்டப்பட்டன. சோதனை நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலை வேளையில், இப் பிரதேசத்து பாடசாலை மாணவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவாறு, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.