மட்டக்களப்பு, ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவில் நடுத்தர தோட்ட விவசாயிகள் 34 பேருக்கு ஒன்றரை இலட்சம் தொடக்கம் ஆறு இலட்சம் ரூபாய் வரை பெறுமதியான விவசாய தொழிநுட்ப உபகரணத் தொகுதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
முற்றிலும் மானிய அடிப்படையில் நீரிறைக்கும் இயந்திரம் ,நீர்; கொள்கலன்கள் , விதை மற்றும் பயிர் நடுகை இயந்திரம் உள்ளிட்ட இன்னும் பல 17 தொழினுட்பங்களை உள்ளடக்கிய உபகரணத் தொகுதிகள் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
நிலைபேறான நவீன தொழினுட்பக் கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூரில் தெரிவு செய்யப்பட்ட விவசாய பயனாளிக் குடும்பங்களுக்கு பெரிய அளவில் விவசாய தொழினுட்ப ஊக்குவிப்பு உபகரணத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல்,ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர்,சுற்றாடல் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ஏ.அப்துல் நாஸர் , இணைப்பாளர் எம்.ஐ. தஸ்லீம் , விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். தேவரஜனி , பயிற்சி அலுவலர் ஸ்டெபரீன் ராகெல் உட்பட நடுத்தர தோட்ட விவசாயிகள் , கமக்காரர் அமைப்பின் வீட்டுத் தோட்ட விவசாயப் பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.