மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
காத்தான்குடி3 குதா வீதியிலுள்ள வீடொன்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர் 23 வயதுடைய பதுர்தீன் சுபைக் அகமட் எனும் இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு தூக்கத்துக்கு சென்றவர் இன்று காலை தூக்கத்திலிருந்து எழும்பாத நிலையில் உறவினர்கள் காத்தான்குடி பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கதுமிந்த நயனசிறியின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ரஹீம் தலைமையில் சென்ற பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
காத்தான்குடி பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து குறித்த வீட்டுக்கு சென்ற நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாறு நீதவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணை களை மேற் கொண்டு வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞர் கடந்த 40 தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியலில் இருந்து பிணையில் விடுதலையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.