மட்டு. சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலயத்தினரின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு

0
338

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகை ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு 13 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாமாங்கம் சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய வின்சன்ட் டி போல் சபை மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்களின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு ஆலயத்தில் இன்று நடைபெற்றது.

சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய வின்சன்ட் டி போல் சபை மற்றும் மறைக்கல்வி ஆசிரிய ஒன்றியம் சமூக மனிதநேய செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு செயற்பாடாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து இரத்ததான நிகழ்வை முன்னெடுத்தது.

தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், விபத்துக்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் புற்று நோயாளர்கள் ,தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் , கற்பிணி தாய்மார்கள், சத்திரசிகிச்சை போன்றவற்றுக்கு குருதி அதிக தேவைப்பாடு உள்ள நிலையில் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

மட்டக்களப்பு மாமாங்கம் சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய பங்குத்தந்தை பிறைனர் செல்லர் தலைமையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் சகாயபுரம் வின்சன்ட் டி போல் சபை உறுப்புணர்கள், மறைக்கல்வி ஆசிரியர் ஒன்றியத்தினர் மற்றும் அமிர்தகழி, புன்னைச்சோலை, மாமாங்கம் ஆகிய கிராம மக்களும் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியிருந்தனர்.