மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு பனிச்சையடி அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலயத்தின் 16வது வருடாந்த திருவிழா இன்று இடம்பெற்ற திருவிழா திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு 2022ஆம் ஆண்டுக்கான ஆலய திருவிழா நிறைவுபெற்றது.கடந்த 19ஆம் திகதி பங்குத்தந்தை பயஸ் பிரசன்னா அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவின் ஒன்பது தினங்கள் நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை அன்னையின் திருச்சொரூப பவனியும் தொடர்ந்து நேற்று காலை மறைமாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல்,நற்கருணை வழங்கப்பட்டு மாலை சிறப்பு நற்கருணை ஆராதனை வழிபாடு அருட்பணி எக்ஸ்.ஐ.ரஜீவன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது.
ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று இடம்பெற்ற விசேட திருவிழா திருப்பலியினை திருகோணமலை மறைமாவட்ட அருட்பணி எக்ஸ்.ஐ.ரஜீவன் அடிகளாரின் தலைமையில் பங்குத்தந்தை இணைந்து இணைத்து ஒப்புகொடுத்தனர்.ஆலய திருவிழா திருப்பலியை தொடர்ந்து ஆலயத்தை சுற்றிய அன்னையின் திருச்சுரூப பவனியும் தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற அன்னையின் திருச்சுரூப ஆசீருடன் ஆலய திருவிழா கொடியிறக்கப்பட்டு வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது.
திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த பெருமளவான மக்கள் ஆலயத்திருவிழா திருப்பலியில் கலந்துகொண்டதுடன் திருவிழாவில் கலந்துகொண்ட மக்களுக்கான அன்னதானமும் வழங்கப்பட்டது.