மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக பிரிவின் எல்லை மற்றும் நிருவாக சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பொது இணக்கப்பாட்டுன் செயற்பட முன்வந்துள்ளமையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.பேச்சுவார்தை ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள், பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
2012 மற்றும் 2021ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நடைபெற்ற எல்லை நிர்ணயக்குழுவின் விதந்துரைகளை மீளாய்வு செய்து விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான புதிய எல்லை நிர்ணயக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலக பிரச்சினை மற்றும் புதிய எல்லை நிர்ணய குழு நியமனத்துக்காக அமைச்சரவையால் வழங்கப்பட்ட அனுமதி குறித்து பேசியிருந்தார்கள்.இவ்விடயம் தொடர்பில் விரிவான தெளிவுப்படுத்தலை வழங்குவது அவசியமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகள் உள்ளன.இதில் 12 பிரதேச செயலக பிரிவுகள் வர்த்தமானி அறிவித்தலால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கோறளைப்பற்று மத்திய,தெற்கு (கிரான்) பிரதேச செயலக பிரிவுகள் இரண்டும் இதுவரையில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தப்படவில்லை.
1999ஆம் ஆண்டு அப்போதைய அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய 6மாவட்டங்களுக்கு புதிய 08பிரதேச செயலகங்களை அமைப்பதற்காக 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இந்த அமைச்சரவை தீர்மானத்துக்கமைய வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிபதற்கு அனுமதியளிக்கப்பட்ட 08பிரதேச செயலகங்கள் செயற்படுகின்ற நிலையில் அதில் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்திய மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகங்களை தவிர்த்து ஏனைய பிரதேச செயலகங்கள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலக விவகாரத்தில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் எடுத்த முயற்சிக்கு அப்பகுதியில் எதிர்ப்பு தோற்றம் பெற்றது. இப்பகுதியின் எல்லை பகுதிகளுக்கு தீர்வு காண்பதற்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன.பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படும் போது அது இனமுரண்பாட்டை தோற்றுவித்து விடக்கூடாது என்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பொது இணக்கப்பாட்டுன் செயற்பட முன்வந்துள்ளமையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். பேச்சுவார்தை ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன்.
பிரதேச செயலக எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 2011 மற்றும் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இருப்பினும் உரிய தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிர்ணயக்குழுவின் விதந்துரைகளை மீளாய்வு செய்து விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான புதிய எல்லை நிர்ணயக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலக எல்லை மற்றும் நிருவாக சிக்கல் தொடர்பில் அந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக்களுக்கு தமது யோசனைகளை முன்வைக்கலாம்.இந்த பிரச்சினைக்கு நிச்சயம் நாங்கள் தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்றார்.