மட்டக்களப்பு போதன வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதனை கண்டித்து வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல்
வைத்தியசாலையின் நிர்வாக பணிமனை முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் சுமார் அரை மணி நேரம் தங்களது எதிர்ப்பினை பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் வெளியிட்டனர்.
வைத்தியசாலை நிர்வாகம் தாதியர் உரிமையை பாதுகாக்க வேண்டும், வியாபார நோக்கில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும், வதந்திகளை நம்பாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
சமூக வலைத்தளங்களை வைத்திருப்பவர்கள் தங்களது வருவாயை ஈட்டிக் கொள்வதற்காக பொய்யான செய்திகளை பரப்பி சமூகத்தில் வைத்தியசாலை குறித்து ஒரு பதட்டமான சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றை பொதுமக்கள் நன்கு விளங்கி வைத்தியசாலை தொடர்பாக தங்களுக்கு இருக்கக்கூடிய நல்ல அபிப்பிராயங்களை இல்லாது ஒழித்து விடாது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவதற்கும் தங்கியிருப்பதற்குமான தங்களது நம்பிக்கையை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.