பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் மாகந்துரே மதூஷின் மரணம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (07) மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் உரிமைகளுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது உயிரிழந்தவரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சட்டத்தரணி சேனக பெரேரா தமது கட்சிக்காரரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்.இதன்படி இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதவான் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் அவ்வாறான உத்தரவை பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தார்.ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் விரும்பினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சென்று முறைப்பாடு செய்து விசாரணைகளை கோரலாம் என நீதவான் குறிப்பிட்டார்.எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மாளிகாவத்தை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.