2012 ஆம் ஆண்டு கிரேக்க பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட நால்வருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 26 ஆம் திகதி முழுமையாக விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (04) கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் ஆர்.எஸ்.எஸ்.சபுவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேக நபரான சந்திரசிறி ஜயசிங்கவின் மரணத்தை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் கையளிக்கப்பட்டன.
அதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் திருத்தப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி முழுமையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.