மந்த கதியில் பந்துவீசிய இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு அபராதங்கள், கில்லுக்கும் அபராதம்

0
126

லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட ஓவர்களை வீசி முடிக்கத் தவறிய இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் கணிசமான தொகை அபாராதம் விதிக்கப்பட்டது.

மந்த கதி ஓவர் விகிதத்திற்காக இந்தியாவுக்கு 100 சதவீதமும், அவுஸ்திரேலியாவுக்கு 80 சதவீதமும் போட்டி கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) திங்கட்கிழமை (12) அறிவித்தது.

அவுஸ்திரேலியாவுடனான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (11) நிறைவடைந்ததுடன் அப் போட்டியில் இந்தியா 209 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

அப் போட்டியில் தனது பிடி சர்ச்சைக்குரிய முறையில் எடுக்கப்பட்டதாக இந்திய துடுப்பாட்ட வீரர் ஷுப்மான் கில், சமூக ஊடகத்தில் விமர்சித்ததற்காக அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் குறைக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அவுஸ்திரேலியா 4 ஓவர்கள் குறைவாக வீசியிருந்ததுடன் இந்தியா 5 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது என ஐசிசி குறிப்பிட்டது.

இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கம்மின்ஸும் குற்றங்களை ஓப்புக்கொண்டதுடன் விதிக்கப்பட்ட அபராதங்களையும் ஏற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து சம்பிரதாயபூர்வ விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை.

இதேவேளை, போட்டியின் நான்காம் நாளன்று போலண்டின் பந்துவீச்சில் கெமரன் க்றீனிடம் பிடிகொடுத்து கில் ஆட்டம் இழந்தார். ஆனால், அந்த பிடி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன.

க்றீன் எடுத்த அந்த பிடி நியாயமானதா என்ற சந்தேகம் எழுந்தது. க்றீன் பந்தைப் பிடித்தபோது அவரது விரல்கள் நிலைத்தை தொட்டவண்ணம் இருந்தன.

ஆனால், அந்த பிடி நியாயமானது என தொலைக்காட்சி மத்தியஸ்தர் றிச்சர்ட் கெட்ல்பரோ தீர்ப்பு வழங்கினார்.

க்றீன் பிடியை எடுத்தபோது அவரது கைவிரல்கள் நிலத்தை தொட்டவாறு இருந்ததை தொலைக்காட்சி சலன அசைவுகள் காட்டின.

இந் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்த பின்னர், அந்தப் பிடி தொடர்பான ஸ்டில் படத்தை 2 பூதக்கண்ணாடிகளுடன் ட்விட்டரில் கில் வெளியிட்டார்.

அவரது இந்த எதிர்மாறான கருத்து பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளானதுடன் அவரது செயல் பொருத்தமற்றது என ஐசிசி சுட்டிக்காட்டியது.

கில்லின் இந்த ஒழுங்கீனமான செயலை அடுத்து அவருக்கு ஒரு தகுதிநீக்கப் புள்ளி வழங்கப்பட்டது.