மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெள்ளிக்கிழமை (28) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.
இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பணியாளர்கள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
அதற்குரிய தீர்வுகளை விரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதன்போது, அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிகாட்டல் கோவையொன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அதனூடாக ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான இயலுமை தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி தெஹிதெனிய மற்றும் ஏனைய உறுப்பினர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பாதிமா பர்ஸானா ஹனீபா, நிமலசேன கார்திய புந்திஹேவா உள்ளிட்டவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.