மனித – யானை மோதல்களைக் குறைக்க புதிய செயலி : 5 கிலோமீற்றர் சுற்றளவில் எச்சரிக்கை!

0
5

மனித – யானை மோதலைக் குறைப்பதையும், இதனால் ஏற்படும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, காட்டு யானைகளின் நடமாட்டத்தை நிகழ் நேரத்தில் அறிவிக்கும் புதிய மொபைல் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செயலியின் உருவாக்குநர்களில் ஒருவரான வினுர அபேரத்ன தெரிவிக்கையில்,

யானைகள் அருகில் வரும்போது மக்களுக்கு எச்சரிக்கை செய்வதன் மூலம் சேதங்கள் மற்றும் மனித உயிரிழப்புகளைக் குறைப்பதே இந்தச் செயலியின் நோக்கம். இலங்கையில் சுமார் 3,000 பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தச் செயலியின்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் யானை நடமாட்டம் தென்பட்டால், பயனர்கள் அதனைச் செயலி மூலம் அறிவிக்க முடியும். உடனடியாக, அந்த இடத்திலிருந்து ஐந்து கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள ஏனைய பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டு, அவர்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

யானை நடமாட்டம் குறித்த தகவல்களைப் பகிர்வதுடன், யானை மரணங்கள், யானை மோதல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகள், சொத்து சேதங்கள் மற்றும் வனவிலங்கு குற்றங்கள் போன்ற சம்பவங்களையும் இந்தச் செயலி மூலம் பயனர்கள் முறைபாடளிக்க முடியும். இதன் மூலம், மனித – யானை மோதல் தொடர்பான விரிவான தகவல்களைப் பெற்று, அதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் இந்தச் செயலி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.