முன்ஜாமீன் வழங்கக் கோரி நடிகா் மன்சூா் அலிகான் தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகா் விவேக், அடுத்த நாள் மாரடைப்பு ஏற்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாா். இந்த நிலையில் மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய நடிகா் மன்சூா் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல் தலைவா்கள் குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தாா்.
இதுதொடா்பான புகாரின் பேரில் நடிகா் மன்சூா் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடிகா் மன்சூா் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், மாநகராட்சி ஆணையா் தனது பேட்டியைத் தவறாக புரிந்து கொண்டுள்ளாா். நான் எந்தவித உள்நோக்கத்தோடு, வேண்டுமென்றே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை. எதேச்சையாக பேட்டியின் போது வெளிப்பட்ட கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் தெரிவித்தேன். தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.செல்வகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் நகர அரசு குற்றவியல் வழக்குரைஞா் இ.ஜெய்ஷங்கா் ஆஜராகி வாதிட்டாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி, முன்ஜாமீன் கோரிய மனுவில் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து, தெளிவான விவரங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.