மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராமத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கச் சென்ற மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது மணல் மாபியாக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை, மணல் அகழ்வில் ஈடுபட்ட மன்னார் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் ஸ்ராலினின் கைப்பற்றப்பட்ட மணல் தூக்கும் வாகனத்தை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக, நேற்று காத்திருந்த பொது மக்கள் மற்றும் கிராம சேவகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொது மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மணல் அகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உட்பட்ட குழுவினர், மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டிருந்த நிலையில், இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்ட மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் மீதோ, குழு மீதோ எந்த நடவடிக்கையும் மேற்கொண்டிருக்கவில்லை.
கைப்பற்றப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கையகப்படுத்தாத நிலையில், அதை பாதுகாத்த மக்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் மீது நேற்றைய தினம் பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் ஸ்ராலின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உட்பட பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் பாதிக்கப்பட்ட நிலையிலும்
இலுப்பைகடவை பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததைத் தொடர்ந்து, ஆத்திமோட்டை கிராம மக்கள் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தானுக்கு விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், தக்குதலுக்குள்ளான நபர் மற்றும் கிராம உத்தியோகத்தரை சந்தித்ததுடன் ஆத்திமோட்டை பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார்.
அத்துடன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்ற பகுதிக்கும் விஜயம் மோற்கொண்டு பார்வையிட்டதுடன், மணல் அகழ்விற்கு வழங்கப்பட்ட முறையற்ற அனுமதி மற்றும் பொலிஸார் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமை தொடர்பில் அமைச்சர், உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக, கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
மணல் அகழ்வுடன் சம்மந்தப்பட்ட ரொஜன் ஸ்ராலின், கூட்டமைப்பின் முருங்கன் வட்டார வேட்பாளர் எனவும், அவர் மீது சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பல வழக்குகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





