28.5 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி கையொப்பம் இட மறுப்பு

மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அவர் இதனை சட்டமா அதிபர் ஊடாக இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு 2019 இல் மரண தண்டனையை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார். இந்த தீர்மானத்தை வலுவற்றதாகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாட்டை நீதிமன்றுக்கு அறிவித்தார். விஜித் மல்லல்கொட, எல்.ரீ.பி. தெஹிதெனிய மற்றும் முருது பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. மரண தண்டனையை மீள அமுல்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபர் நேற்று ஜனாதிபதியின் நிலைப்பாட்டை வினவியபோது, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தனது கையொப்பத்தை, இனிமேல் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, தமது நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே, மரண தண்டனையை அமுல்படுத்துவதில்லை என அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர வேண்டிய அவசியம் உள்ளதா என்பது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதியரசர் குழாமின் தலைமை நீதியரசர் விஜித் மலல்கொட மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்தார். முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதியரசர் குழாம், இந்த மனுக்களை அடுத்த வருடம் பெப்ரவரி 23 ஆம் திகதி ஆராய தீர்மானித்தது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தாம் கையொப்பமிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஜூன் 26 அறிவித்திருந்தார். ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் இந்தத் தீர்மானத்தை வலுவற்றதாக்கக் கோரி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், கைதிகளைப் பாதுகாக்கும் அமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர். முன்னாள் ஜனாதிபதியின் முடிவு அரசாங்க கொள்கைக்கு எதிரானது என்றும் மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இது சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு எதிரானது, நியாயமற்றது என்றும் மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுக்கள் ஊடாக நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles