சம்பள பிரச்சினை உள்ளிட்ட 7 கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி மருத்துவ துறைசார் மூன்று தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் ஒன்றித்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏழு கோரிக்கைளை முன்வைத்து நாம் கடந்த 10 நாட்களாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
எமது கோரிக்கைள் தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை சுகாதார அமைச்சு இதுவரை முன்வைக்காததால் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
இந்நிலையில்; எதரிவ்ரும் 7ஆம் திகதி காலை 7 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மூன்று தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் சகல ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
எமது கோரிக்கைகள் தொடர்பில் நாம் நேற்றைய தினம் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டோம். இந்த கலந்துரையாடல் சுகாதார அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது எமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்குவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் உறுதிமொழி வழங்கினார். எமது நிலைப்பாடு தொடர்பில் நாம் அவர்களுக்கு எடுத்துரைத்தோம். எனினும் நாம் எதிர்கொண்டுள்ள சம்பள பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சு அறிந்திருக்கவில்லை என்பது நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பில் புலனாகியது என்று கூறினார்.