மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் நேற்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும்.
பல்வேறு எதிர்ப்புகள், சிக்கலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மலேசிய பிரதமர்.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் சிலவும்கூட, இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
கொரோனா நெருக்கடி காரணமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாகும் என்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன.
தற்போது 95 வயதைக் கடந்துவிட்ட மகாதீர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய பக்காத்தான் ஹராப்பான் சார்பில் அன்வார் இப்ராகிம் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
அம்னோ சார்பில் நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற கலைப்பு குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம் முதலே, இந்தப் பொதுத்தேர்தலில் மலேசிய இந்தியர்கள் எந்த அணியை ஆதரிப்பார்கள் என்பது குறித்த விவாதங்கள் தொடங்கி உள்ளன.