மலையகப் பிரதேசங்களில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் நியமனங்களுக்காக உள்வாங்குவது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மலையகப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளராக உள்வாங்கப்படவுள்ளவர்கள் தொடர்பான வர்த்தமானி தொடர்பாகஇ நாடாளுமன்றில் இன்று (20) வாய்மொழி கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட வினாவிற்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறு ஆசிரிய உதவியாளர்களின் உள்ளீர்ப்பானது மத்திய அரசாங்கத்தின் கீழா அல்லது மாகாண சபைகளின் கீழா இடம்பெறுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர்
‘ஊவா, மத்திய, தென், சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் நிலவும் தமிழ் மொழிமூல பாடசாலைகளின் ஆசிரியர் பற்றா நிலையை நிவர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகிறது.
ஊவா, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இருக்கின்ற பட்டதாரிகள் குறித்த விபரங்களைச் சேகரித்து வருகிறோம்.
அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க அவதானம் செலுத்தி இருக்கிறோம்’ என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.