வரலாற்றுச் சிறப்பு மிக்க மல்வத்து மஹா விஹாரையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘மாத்கமுவ விஹாரை’, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மல்வத்து மஹா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின் மஹா நாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரைச் சந்தித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
மல்வத்து மஹா விஹாரை வளாகத்தில் அமைந்துள்ள, மாத்கமுவ விஹாரையின் பழைய கட்டிடம் முற்றாக அழிக்கப்பட்டு, ஜனாதிபதியின் ஆலோசனைப்படி, கடற்படையின் பங்களிப்பில், சுமார் ஒரு வருட காலப் பகுதியில், மூன்று மாடிக் கட்டடமாக நிர்மாணிக்கப்பட்டது.
பாரம்பரிய முறைகளுக்கமைய, இந்தப் புதிய கட்டிடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதற்கான சன்னஸ் பத்திரம், மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரரிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன, கட்டடத்துக்கான சாவியை, அநுநாயக்கத் தேரரிடம் கையளித்தார்.
மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட விஜித்தசிறி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து, ஜனாதிபதிக்கு ஆசீர்வாதமளித்தனர்.
இந்த நிகழ்வில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, புத்தசாசன அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன, பொது அறங்காவலர் கணேஸ் தர்மவர்தன, கண்டி விஷ்ணு மஹா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே மஹேன்ரத்வத்தே, பத்தினி மஹா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஹேமந்த பண்டார ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.