பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட துடுப்பாட்டப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து, தேசிய மட்டப் போட்டிக்கு கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் இருந்து பின்தங்கிய பகுதியில் அக்கராயன் மகாவித்தியாலயம் அமைந்துள்ளது.
அக்கராயன் மகாவித்தியாலத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் விவசாயத்தையே ஜீவனோபாயமாகக் கொண்டிருந்தாலும், பெரும்பாலானவர்கள் நாளாந்த கூலி வேலைக்குச் செல்வோராகவும் காணப்படுகின்றனர்.
கஸ்டப் பிரதேச பாடசாலையாக உள்ள அக்கராயன் மகா வித்தியாலயம் சில வருடங்களுக்கு முன்னரே 1ஏபி பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டிருந்தது.
பாடசாலை தரம் உயர்த்தப்பட்ட போதும், அப் பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் வீதி போன்ற வசதிகளில் கைவிடப்பட்ட நிலைமையே காணப்படுகின்றது.
இவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்ற போதும், அக்கராயன் மகா வித்தியாலய மாணவர்கள் கல்வித்துறையில் சாதனைகளை நிலை நாட்டி வருகின்றனர்.
2019ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், இப்பாடசாலையில் இருந்து விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய மாணவனொருவர், மாவட்ட நிலையில் 2ம் இடத்தைப்பெற்று மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியிருந்தார்.
2021ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையிலும் இப்பாடசாலையில் இருந்து தோற்றிய மாணவியொருவர்
மாவட்ட நிலையில் முதலிடத்தைப் பெற்று மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
அத்தோடு பிறிதொரு மாணவன் பொறியியல் பீடத்திற்கும் தெரிவானார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கல்வித் துறையில் சாதித்து வரும் அக்கராயன் மகா வித்தியாலய மாணவர்கள், 39 அணிகள் பங்குபற்றி மாகாண மட்ட போட்டியொன்றில் முதலிடத்தைப் பெற்று விளையாட்டுத் துறையிலும் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home முக்கிய செய்திகள் மாகாண மட்ட துடுப்பாட்டப் போட்டி: கிண்ணத்தைச் சுவீகரித்து அக்கராயன் ம.வி – தேசிய மட்டத்திற்கு தெரிவு