கொரோனா பெருந்தொற்றின் பின்னர் சீனாவில் இறப்பு வீதம் உயர்ந்து பிறப்பு வீதம் சடுதியாக குறைந்துள்ளது.
141 கோடி சனத்தொகை கொண்ட அந்த நாட்டில், கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 7.52 என்ற அளவில் இருந்தது. இது நடப்பு ஆண்டில் 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.
ஏற்கனவே, சடுதியாக குறைந்த பிறப்பு வீதத்தை அதிகரிக்க 2015 ஆம் ஆண்டு முதல் சீனா பல முயற்சிகளை எடுத்துள்ளது.
இதற்காக ஒரு குழந்தை திட்டத்தை இரத்து செய்து 3 பிள்ளைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதித்தது.
ஆனால், பலன் கிட்டவில்லை.
இதையடுத்து, திருமணம் ஆகாதவர்கள்கூட குழந்தை பெற்று கொள்வதற்கு சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்தது. இதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையாக, பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்ய முன் வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதிலும் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை.
இந்நிலையில், சீனாவில் உள்ள 9 கல்வி மையங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரலில் இருந்து முதல் வாரத்தில் காதல் செய்ய விடுமுறை அளிக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை மாணவ, மாணவியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு, அவர்கள் இயற்கையை காதலிப்பதற்கும், வாழ்க்கையை காதலிப்பதற்கும் மற்றும் விடுமுறையை அனுபவித்து காதலை கொண்டாடவும் கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்தியுள்ளன.