மாணவியின் உயிரிழப்புக்கு சட்டநடவடிக்கை அவசியம்!

0
18

பிரபல கல்லூரியின் மாணவி தற்கொலை தொடர்பாக, முகநூலிலோ சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ நீதியைப் பெற்றுக்கொள்ள முடியாது. சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என தெரிவித்த அமைச்சர், அதனால்

சம்பந்தப்பட்டவர்கள் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நீதியை கோரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிள்ளார்.

நேற்று (08) பாராளுமன்ற அமர்வின்போது, கொழும்பு கொட்டாஞ்சேனை மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக நடைபெற்ற தர்க்கத்தின்போது, அதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

”மாணவி தொடர்பாக குறிப்பிடப்படும் சம்பவம் கடந்த 2024 டிசம்பர் மாதமே இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை பார்க்கும்போது, குறித்த மாணவி உளநல வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்ற பின் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனை அறிகையின் மூலம் தெரிய வந்துள்ளது. இம் மாணவியின் பெற்றோரை கடந்த 05 ஆம் திகதி சிறுவர் பாதுகாப்பு பிரிவிற்கு வந்து முறைப்பாடு ஒன்றை முன்வைக்குமாறு நான் தெரிவித்திருந்தேன்.

ஆனால், அவர்கள் இதுவரை அங்கு வரவில்லை. அதேபோன்று இன்று (நேற்று 08)அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது மகஜர் கையளிக்க வந்த சந்தர்ப்பத்திலும் அந்த பெற்றோரை வந்து சந்திக்குமாறு நான் தெரிவித்தபோதும் அவர்கள் வரவில்லை . நாளை (இன்று 09)அல்லது நாளை மறுதினம் (நாளை 10) அவர்கள் எம்மை சந்திப்பதாக கூறியிருக்கின்றார்கள்.