மாணவியின் மரணத்துக்கு காரணமானவர்களை பாதுகாக்க அரசாங்கம் முயற்சி ; நளின் எம்.பி!

0
26

கொட்டாஞ்சேனை தொடர்மாடியில் தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவியின் மரணத்துக்கு காரணமாக இருப்பவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் ஒருவருடத்துக்குள்ளேயே முடிவுறும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். 

கொழும்பில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

கொட்டாஞ்சேனை தொடர்மாடியில் தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவி விவகாரத்தில் சந்தேகநபர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 

சில சந்தேகநபர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, சிலர் குற்றப்புலனாய்வு பிரிவில் சென்று முறைப்பாடளிக்கின்றனர். 

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் இது குறித்து தனக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்று கூறுகின்றார். 

உயிரிழந்த மாணவிக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் முன்னிலையாக வேண்டிய அமைச்சர் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக மாத்திரம் முன்னிலையாகியுள்ளார். 

இதே நிலைமை தொடர்ந்தால் இந்த அரசாங்கத்தால் தொடர்ச்சியாகப் பயணிக்க முடியாது. அரசாங்கம் அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக அல்லது ஒரு வருடமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலைமையிலேயே உள்ளது என்றார்.