மிச்செல் பச்லெட்டின் பரிந்துரைகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே அமையும் – திஸ்ஸ அத்தநாயக்க

0
130

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளானது, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே அமையும் என்றும் இது மிகவும் தீர்மானத்துக்குரிய விடயமாகும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை முதன் முதலாக எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்ட பின்விளைவுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பரிந்துரைகளை இம்முறை ஜெனீவா அமர்வில் மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கவுள்ள நிலையில் இது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் விடயமாக அமையும்.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு நற்பெயர் கிடையாது என்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறான சூழலில் இலங்கை கிரிக்கெட் அணியானது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி நாட்டுக்கு பெருமையை சேர்த்துள்ளது. பிரதான எதிர்க் கட்சி என்ற முறையில் நாம் இலங்கையின் கிரிக்கெட் அணிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது நாட்டில் பொருளாதார நெருக்கடி, நாணய இருப்பில் வீழ்ச்சி, மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றியானது நாட்டுக்கு நற்பெயரை தந்ததாக அமைந்துள்ளது.

எனவே மீண்டும் ஆசிய கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு காரணமான சகல வீரர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேபோன்று ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியிலும் எமது இலங்கை அணி வெற்றியை பெற்று எமது நாட்டுக்கு பெருமையை தேடி தந்துள்ளனர். அந்த அணியினருக்கும் நாம் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்வறான சூழ்நிலையில், தற்போதைய ஜெனீவா அமர்வு இன்று விசேட அவதானத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது.

இலங்கையில் இடம்பெறும் தொடர் மனித உரிமை மீறல்களால் சர்வதேச ரீதியில் இலங்கையானது அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றுது.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஜெனீவா அமர்வில் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிராக பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட வண்ணமே உள்ளன.

எனவே இது மிகவும் தீர்மானத்துக்குரிய விடயமாகும். இம்முறை நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு எதிராக பரிந்துரைகளை முன்வைக்கவுள்ள நிலையில் இந்த விடயம் சர்வதேச ரீதியில் அவதானத்தை பெற்றுள்ளது.