மின்சார கட்டணம் இன்று முதல் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, இலங்கை மின்சார சபைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்றைய தினம் வழங்கியிருந்தது.
இந்தநிலையியல், 8 வருடங்களின் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மின்சார கட்டணங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படும். நாட்டில் டொலரின் கையிருப்பை அதிகரிப்பதன் நோக்கில் மின்சார கட்டணத்தை டொலரில் செலுத்தினால் 1.5 சதவீத கழிவு பெற்றுக்கொடுக்கப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘நாட்டில் 78 இலட்சம் வாடிக்கையாளர்கள், மின்சாரத்தை பெறுகின்றனர்.
அவர்களில் 67 இலட்சம் பேர் வீட்டுப்பாவணைக்காகவும், ஏனைய 11 லட்சம் பேர் வர்த்தகம் உள்ளிட்ட பொது செயற்பாடுகளுக்காகவும் மின்சாரத்தை பெறுகின்றனர்.
வீட்டுப் பாவனைக்காக மாதாந்தம் மின்சாரத்தை பெறுவோரில் 48 லட்சம் பேர், 90 அலகுகளுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், திருத்தப்பட்டுள்ள மின் கட்டணத்துக்கு அமைய, 1 முதல் 30 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 2 ரூபா 50 சதமாக காணப்பட்ட கட்டணம், 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும், 61 முதல் 90 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 7 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
91 முதல் 180 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 27 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 30 அலகுகளுக்கும் குறைவான பாவனையைக் கொண்ட பிரிவினருக்கு மொத்த செலவில் 25 சதவீதம் அறவிடப்படுவதாகவும், அவர்களுக்கு இன்னும் 75 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
31 முதல் 60 அலகுகளுக்கு உட்பட்ட பாவனையாளர்களுக்கு, மொத்த செலவில் 40 சதவீதம் அறவிடப்படுகிறது. அவர்களுக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
61 முதல் 90 அலகுகளுக்கு உட்பட்ட பாவனையாளர்களுக்கு, 50 சதவீத கட்டணம் மட்டுமே அறவிடப்படுகிறது.
அந்த வகையில் 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. அதன்படி, 75 சதவீத மின்சார பாவனையாளர்களுக்கு இன்னும் மானியம் வழங்கப்படுகிறது.’
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு நிறுவனங்கள், ஹோட்டல் துறை மற்றும் கைத்தொழில் துறைக்கு மானியம் வழங்கும் வகையில் புதிய கட்டண திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறித்த கட்டண உயர்வில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது, மூன்று மாத காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.’