மியன்மாரில் போர்நிறுத்தம் அறிவிப்பு!!

0
52

மியன்மாரில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக, ஆயுதக் குழுக்களுக்கு எதிரான போர் நிறுத்த அறிவிப்பை மியன்மார் இராணுவ அரசு வெளியிட்டுள்ளது.

மியன்மார் மற்றும் அதன் அயல் நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து உடல்கள் மீட்கப்பட்ட வண்ணம் உள்ளன.

இதற்கிடையே, மியன்மாரில் இராணுவ அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவ ஆட்சிக்குழுவிற்கும், நாடு முழுவதும் உள்ள இனப் போராளிகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 

நேற்று முன்தினம் (1) மியன்மார் இராணுவம் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற சீன செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையிலும் கிளர்ச்சியாளர்கள் மீது விமானத்தில் சென்று குண்டு வீசி தாக்குவதை மியன்மார் இராணுவம் நிறுத்தவில்லை.

இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மியன்மார் இராணுவ அரசுக்கு ஐ.நா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக மியன்மார் அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 22 ஆம்  திகதி வரை இந்த போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என்றும் அந்நாட்டு இராணுவ அரசு தெரிவித்துள்ளது.