அமெரிக்காவின் புளோரிடாவை தாக்கிய மில்டன் சூறாவளி காரணமாக இரண்டு மில்லியன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சொத்துக்களிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியினால் இந்த நூற்றாண்டின் சூறாவளி என வர்ணிக்கப்பட்ட மில்டன் சூறாவளி புளோரிடாவின் சரசொட்டா பகுதியை தாக்கியுள்ளது என அமெரிக்காவின் சூறாவளி கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் மில்டன் சூறாவளி புதன்கிழமை 5-ம் நிலையில் இருந்து 3-ம் நிலை புயலாக வலுவிழந்தது. இருப்பினும் அது புளோரிடாவை நெருங்கிய போது மணிக்கு 195 கி.மீ வேகத்தில் காற்று வீசியது என்று அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
சூறாவளி காரணமாக புளோரிடா மாகாணத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன. சரசோடா கவுண்டி அதன் அண்டைப் பகுதியில் இருக்கும் மனாடீ கவுண்ட் பகுதிகளில் தான் அதிக அளவிலான மின்தடை ஏற்பட்டுள்ளது. புளோரிடாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள புனித லூசி கவுன்டியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் உயிரிழப்புகள் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹெலேன் சூறாவளி தாக்கப்பட்ட புளோரிடாவில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது.
ஹெலேன் மற்றும் மில்டன் புயல்களால் புளோரிடாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே மில்டன் சூறாவளி குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் இந்த நூற்றாண்டில் புளோரிடாவைத் தாக்கிய புயல்களில் மில்டன் புயல் மிகவும் ஆபத்தானது மற்றும் அழிவுகரமானது என்று தெரிவித்திருந்தார்.
மக்கள் உள்ளூர் பாதுகாப்பு வழிமுறைகளை மற்றும் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் மில்டன் சூறாவளி பற்றிய அரசின் பதில்களை விமர்சித்திருந்த ட்ரம்பின் கருத்துக்களை பொய்களின் மூட்டை என்று விமர்சித்தார்.
இதனிடையே புளோரிடா அவசரகால மேலாண்மை பிரிவு அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் “மில்டன் புயல் மிகவும் ஆபத்தானது. மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும். ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு அருகே நிற்காமல் பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும். புயல் தொடர்ந்து நகர்ந்து வருவதால் அச்சுறுத்தலான பாதிப்புகள் வியாழக்கிழமை வரைத் தொடரும்” என்று தெரிவித்துள்ளது.