மீண்டுமொரு போரை நாங்கள் விரும்பவில்லையென்று சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
சம்பந்தன் நிதானத்துடன்தான் இவ்வாறெல்லாம் பேசுகின்றாரா – என்னும் கேள்விக்கு அப்பால் ஜனநாயக தலைமை என்னும் வகையில் ஆற்ற வேண்டிய பணிகளை சம்பந்தன் முன்னெடுத்தாரா அல்லது ஆகக் குறைந்தது தென்னிலங்கைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையிலான ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றாரா என்னும் கேள்வி உண்டு.
ஜனநாயக ரீதியில் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவதற்கான ஆளுமையற்றிருக்கின்றபோது நாங்கள் மீண்டுமொரு போரை விரும்பவில்லையென்று கூறுவது ஒரு பொறுப்பற்ற வாதமாகும்.
யார் முன்னெடுக்கப் போகும் போர் அது? ஏற்கனவே, யுத்தத்தால் உருக்குலைந்து நிமிர முடியாமல் கிடக்கும் மக்கள் கூட்டமொன்று எவ்வாறு இன்னொரு போர் பற்றி சிந்திக்க முடியும்? சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கிய போதுகூட, ஒரு ஜனநாயக தலைமை ஆற்ற வேண்டிய பணிகள்
எவற்றையுமே முன்னெடுக்கவில்லை.
சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் தாங்களாக எதனையும் முன்னெடுக்கப் போவதில்லை.
சந்திரிகா காலத்தில், அவர் சில விடயங்களை முன்னெடுக்க முற்பட்டார் என்பது உண்மையாயினும்கூட, விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சூழலில்தான் சந்திரிகாவும் அவ்வாறானதொரு முடிவுக்கு வந்திருந்தார்.
இதனைத் தவிர, இரண்டு பிரதான சமரச பேச்சு சூழல்களிலும் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே கொழும்பின் சிங்கள ஆளும் வர்க்கம் கீழிறங்கியது.
முதலாவது, இந்திய – இலங்கை ஒப்பந்தம்.
இரண்டாவது, நோர்வே தலைமையில் நடைபெற்ற பேச்சு.
இரண்டுக்கும் இடையில் சில வேறுபாடுகள் இருந்தபோதிலும்கூட, இரண்டு சந்தர்ப்பங்களிலும் சிங்கள ஆட்சியாளர்கள் வேறு வழியின்றியே கீழிறங்கினர்.
எனவே, சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் நிர்ப்பந்தங்களில்லாமல் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் இறங்கி வரப்போவதில்லை.
இந்த பின்புலத்தில் சிந்தித்தால் அரசியல் தீர்வு விடயத்தில் விரைந்து செயல்பட வேண்டும்.
மீண்டுமொரு போரை நாங்கள் விரும்பவில்லை – இவ்வாறான அறிக்கைகளை சிங்கள ஆட்சியாளர் – குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்க ஒரு நகைச்சுவையாகவே கடந்து சென்றுவிடுவார்.
எனவே, இப்போது தமிழ்த் தேசிய கட்சிகள் என்போர் சிந்திக்க வேண்டிய விடயம் – எவ்வாறு தென்னிலங்கையின் மீது ஜனநாயக நெருக்கடிகளை ஏற்படுத்த முடியும்.
அதற்காக எவ்வாறு அனைவரும் ஓரணியாக செயலாற்ற முடியும்? ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து காய்கள் நகர்த்தப்படும்போது, அதனை எவ்வாறு தமிழ் மக்களின் நலனிலிருந்து பயன்படுத்த முடியும்? இந்தக் கேள்விகளின் அடிப்படையில்தான் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் வியூகங்களை
வகுக்க வேண்டும்.
செயலாற்ற வேண்டும்.
அவ்வாறில்லாது அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதால் எவ்வித நன்மையுமில்லை.
மக்கள் தமிழ் அரசியல் தலைமைகள்மீது முற்றிலுமாக நம்பிக்கையிழந்து விட்டனர்.
ஏனெனில், இந்த அரசியல்வாதிகளின் சத்தங்களுக்கு மத்தியில்தான் பௌத்த மயமாக்கல் முன்னெடுக்கப்படுகின்றது.
அரசியல்வாதிகளால் எதனையும் செய்ய முடியவில்லை.
வடக்கு – கிழக்கில் பல்வேறு பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்துக்கு உட்பட்ட இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அவ்வாறாயின் அரசியல்வாதிகளின் பெறுமதி என்ன என்னும் கேள்வி எழுவது இயல்பானதே.